கொரோனா பாதிப்பு எதிரொலியாக விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் முன்கூட்டியே வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

NirmalaSitharaman

மேலும், தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

இதனிடையே, வீட்டில் முடங்கி உள்ள விவசாயிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர்களது நிலை கேள்விக் குறியானது.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பு எதிரொலியாகப் பொதுமக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார்.

NirmalaSitharaman

அதன்படி, 

- ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
- மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு செய்யப்படுகிறது.
- விவசாயிகளுக்கு ஆண்டுக்குத் தரப்படும் 6 ஆயிரம் ரூபாயில், 2 ஆயிரம் ரூபாய் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும்.  
- உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்.
- 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படுவதால், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்கள் பயன்பெறும். 
-  ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 3 மாதத்துக்குத் தலா 500 ரூபாய் வழங்கப்படும்.
- 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 200 ரூபாய் வழங்கப்படும்.

- பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாதத்துக்குக் கூடுதலாக வழங்கப்படும்.
- ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.
- முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 2 தவணைகளாக 3 மாதங்களுக்கு  
வழங்கப்படும்.
- 100 பேருக்குக் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம், ஊழியர்கள் யாருக்கும் 3 மாதத்துக்கு பி.எப். கட்ட 
தேவையில்லை. அந்த தொகையை மத்திய அரசே செலுத்தும்.
-  வருங்கால வைப்பு நிதியில் 75% திரும்பியளிக்கத் தேவையில்லாத தொகையைப் பெற்றுக்கொள்ளும் வசதியின் மூலம், 4.8 கோடி ஊழியர்கள் பலனடைவர்.

என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.