குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா வரலாம் என்றும், மருந்து கண்டுபிடிப்பதே நிரந்தர தீர்வு என்றும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு உலகமே அஞ்சி நடுங்குகிறது. இந்த கொரோனா வைரசால் இதுவரை 200 க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் சிகிச்சை முறை மட்டுமே உலகம் முழுவதும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் சில நாட்களுக்குப் பின், தங்களது அன்றாட பணிகளைச் செய்யலாம் என்றும், அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று வராது என்றே இதுவரை கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, கொரோனா வைரஸ் முதன் முதலாகச் சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் நிலையில், அந்நாடு கொரோனாவின் பிடியிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு, மீண்டும் கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், உலக நாடுகள் அனைத்தும் கடும் அதிர்ச்சியடைந்தன. இது குறித்து, உலக சுகாதார அமைப்பு தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும், கொரோனா வராது என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து உலக சுகாதார அமைப்பு பின்வாங்கியுள்ளது.

ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கினால் மீண்டும், அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள உலகா சுகாதார அமைப்பு, மருந்து கண்டுபிடிப்பது ஒன்றே இதற்கான முழுமையான தீர்வளிக்கும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

கொரோனாவால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என்று, உறுதியாகக் கூறமுடியாது என்றும் உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.