தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெயில் கொளுத்தி எடுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் ஒரு பக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதே நிலையில், இன்னொரு பக்கம் தமிழகத்தில் கோடைக் காலம் பிறந்து, வழக்கத்தை விட வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

Heat in TN to rise meteorology dept update

இதனால், தமிழக மக்கள் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்காமல் தப்பித்து வரும் அதே வேளையில், சுட்டெரிக்கும் வெயிலிருந்தும் தாக்குப் பிடித்து, அதிலிருந்து தப்பித்துப் பிழைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களவே, வழக்கத்தை விட வெயில், மிக கடுமையாக வாட்டி வருகிறது. இதனால், நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர்.

நேற்று மட்டும் தமிழகத்தின் சுமார் 8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்களைச் சுட்டெரித்தது.

Heat in TN to rise meteorology dept update

அதன்படி திருச்சி, கரூரில் மட்டும் 105 டிகிரி வெயிலின் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல், மதுரையில் 104 டிகிரியும், சேலம் மற்றும் வேலூரில் 103 டிகிரியும், தருமபுரியில் 102 டிகிரியும், நாமக்கல்லில் 101 டிகிரியும் வெயிலின் வெப்பம் பதிவானதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இனி வரும் நாட்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம், இன்னம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல், மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, கொட்டாரம், சுசீந்தரம், பூதப்பாண்டி, கீரிப்பாறை உட்பட அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அந்த பகுதிகளில் கோடை வெப்பம் சற்று தணிந்து, குளிர்ச்சி நிலவியது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.