சென்னையில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எதிர்பார்த்த அளவை விட, சற்று வேகமாகப் பரவி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். தமிழகத்திலேயே அதிக பட்சமாகச் சென்னையில் தான், அதிகமானோர் கொரோனாவுக்கு பாதிகக்ப்பட்டள்ளனர்.

Coronavirus Chennai 457 new positive cases

இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் சுமார் 52 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், ஒரே நாளில் கோடம்பாக்கத்தில் 16 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், சென்னையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை தற்போது 130 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தடையார்ப்பேட்டையில் 59 பேருக்கும், திரு.வி.க. நகரில் 55 பேருக்கும், தேனாம்பேட்டையில் 53 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 52 பேருக்கும், அண்ணாநகரில் 39 பேருக்கும் கொரோனா பரவி உள்ளது.

Coronavirus Chennai 457 new positive cases

அதேபோல், திருவொற்றியூரில் 13 பேருக்கும், வளசரவாக்கத்தில் 13 பேருக்கும், அடையாறில் 10 பேருக்கும், ஆலந்தூரில் 9 பேருக்கும், பெருங்குடியில் 8 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும், அம்பத்தூர் மற்றும் மணலியில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் ஆண்கள் 65.19 சதவீதம் பேரும், பெண்கள் 34.81 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
அதேபோல், 30 வயது முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 91 பேருக்கும்; 20 வயது முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 91 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும், 40 வயது முதல் 49 வயதுள்ளோருக்கு 77 பேருக்கும், 50 வயது முதல் 59 வயதுள்ளோர் 74 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. 

இதனிடையே, சென்னையில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையில், இதுவரை 19 லட்சத்து 38 ஆயிரத்து 662 பேரிடம் முழுமையாகப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.