இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியாவில் முதன் முறையாக, கடந்த ஜனவரி 30 ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிப்ரவரி 3 ஆம் தேதி, மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் தீயாய் பரவும் கொரோனா வைரசால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 606 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது. இந்தியர்கள் 602 பேரும், வெளிநாட்டினர் 47 பேரும் என மொத்தம் 649 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லிருந்து 4 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், கர்நாடகாவில் 41 பேரும், குஜராத்தில் 33 பேரும், உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தலா 35 பேரும், ராஜஸ்தானில் 32 பேரும், டெல்லியில் 31 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.