இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 88 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 தாண்டி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உள்ள நிலையில், தற்போது வரை சுமார் 63 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கொரோனா தாக்கம் காரணமாகப் பாதிக்கப்படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. அதன்படி, நேற்று வரை இந்தியா முழுவதும் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் எண்ணிக்கை 700 தாண்டி உள்ளது. மிக சரியாக தற்போது வரை 724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளிநாட்டவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்தியாவிலேயே அதிக பட்சமாகக் கேரளாவில் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவில் தற்போது புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவுக்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.