தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் பீகார் தேர்தலை நாடே உற்று கவனித்தது. பீகாரில் நடந்து முடிந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும், இன்னொரு பக்கம் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் மகனான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ், மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கிய மகாக் கூட்டணி சண்டமாருதம் செய்தனர்.

மிகவும் பதற்றமான சூழ்நிலைகள் கடந்து ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் நாடே எதிர்பார்த்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு.

எந்த இழுபறியுமின்றி தனிப் பெரும்பான்மையோடு நிதிஷ் வெற்றிபெற்றுள்ளார். அதேப் போல் தேஜஸ்வி யாதவும் 75 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மைக் கட்சியாக ஆவர்த்தனம் செய்கிறார்.

மகாக்கூட்டணி மொத்தம் 110 இடங்களை வென்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இருந்து ஆர்.ஜே.டி தனது வாக்கு வங்கியை பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும், காங்கிரஸ் தான் தொடர்ந்து செயல்படவில்லை என்றக் குற்றச்சாட்டு எழுந்ததுடன், மகாக் கூட்டணியின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் கணிசமாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆம். காங்கிரஸ் 70 இடங்களில் நின்று, வெறும் 19 இடங்களில்தான் வென்றுள்ளது. இது மிகவும் சொர்ப்பமான எண்ணிக்கைத்தான். இதனால்தான் மகாக் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. அதாவது காங்கிரஸ் - பாஜக நேரடியாக மல்லுக்கட்டிய தொகுதிகளில் மக்கள் பாஜகவிற்கே பரிவட்டம் கட்டியுள்ளனர். .

பீகார் தேர்தல்களுக்கு முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் ஆர்ஜேடி தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் 70 இடங்களிலும், ஆர்ஜேடி 144 இடங்களிலும், ஒருங்கிணைந்த இடதுசாரி கட்சிகள் 29 இடங்களிலும் போடியிட்டன. நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, இடதுசாரி கட்சிகள் நியாயமான முறையில் சிறப்பாக செயல்பட்டு,சிபிஐ (எம்எல்) 11 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. 2015 தேர்தல்களில் சிபிஐ(எம்எல்) 3 தொகுதிகளே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரி கட்சிகள் இரவு பகல் பாராமல் தங்கள் இளைஞர் படையை வைத்து தேர்தல் களத்தில் கபடி ஆடினர். ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முகப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தது.

மேலும் , சிபிஐ(எம் எல்) கட்சி பின்தங்கிய சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை களமாட செய்ததில் தங்கள் கொள்கைக்கும் கூட்டணிக்கும் அவர்தம் நியாயத்தை நிலைநாட்டியிருக்கின்றன. இடதுசாரிகள் இப்படி செயல்பட, பாரம்பரிய கட்சியான சர்வ வல்லமைப் படைத்த காங்கிரஸ் கட்சி இப்படி மண்ணைக்கவ்வியது சற்று பரிதாபத்திற்குரிய விஷயம்தான். களத்திலும் சரியாக பங்காற்றவில்லை, வாக்குகளைக் கைபற்றுவதிலும் கோட்டைவிட்டிருக்கிறது காங்கிரஸ்.
மகாக் கூட்டணியின் பெரும் பங்குதாரராக இருந்தும் வெறும் 19 இடங்களே வென்றிருப்பது காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழந்திருக்கிறது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஏன்? ஏனென்றால் காங்கிரஸ் 2015 தேர்தலில் 27 இடங்களை வென்றிருந்தது.,ஆனால் இம்முறை 9 தொகுதிகளை இழந்திருக்கிறது. காங்கிரஸ் எந்த இடத்தில் கோட்டைவிடுகிறது? ஏன் வெற்றியை தழுவ முடியவில்லை? பாரம்பரியமிக்க பெரிய கட்சிக்கு தேர்தல் அரசியலை சரிவர செய்யத் தெரியவில்லையா? இவை மட்டுமின்றி பிற மாநிலங்களில் கூட்டணியில் முக்கிய பங்குதாரராக அங்கம் வகித்த காங்கிரஸ் எப்படி செயல்பட்டது என்பதை வரலாற்றின் பக்கங்களிலிருந்து சற்று புரட்டிப் பார்ப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் ஒரு முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணி திமுக தலைவர் மு.க ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் மற்றும் சில பல சிறு கட்சிகளைக் கூட்டணியில் கொண்டு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால், கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக 176 இடங்களிலும் , காங்கிரஸ் 41 இடங்களிலும் போட்டியிட்டது.

தேர்தலில் திமுக, வெறும் 1.06% சதவீத வாக்கு வித்தியாசத்தில் கோட்டையில் ஆட்சி அமைக்கும் கனவை கோட்டைவிட்டது. இதற்கு காரணம் யார்? திமுக போட்டியிட்ட இடங்களில் 89 இடங்களில் வென்றது. காங்கிரஸோ 41 இடங்களில் வெறும் 8 இடங்களில்தான் வெற்றிபெற்றது. திமுக உடனடியாக உட்கட்சி கூட்டத்தை கூட்டியது, கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் காங்கிரசுக்கு 41 இடங்கள் வழங்கியிருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். காங்கிரஸ் கட்சிக் காரர்களே அவர்களுக்காக உழைப்பைப் போடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரச்சாரம் சரியாக செய்யவில்லை, கட்சியின் தொண்டர்கள் சரிவர பணியாற்றவில்லை, தலைவர்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என்று பலதரப்பட்ட விமர்சனங்களை காங்கிரஸ் சந்திக்க வேண்டியாயிற்று.தேசியத் தலைவர்கள் வந்திருந்தப் பிரச்சாரத்திற்குக் கூட காங்கிரசாரால் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை என்று திமுக தரப்பு குற்றம்சாட்டியது. மந்தமான பிரச்சாரங்களையே முன்னெடுத்தது காங்கிரஸ் கட்சி. அந்தத் தேர்தலில்தான் ஜெயலலிதா இரண்டாம் முறையாக முதல்வர் என்னும் கொற்றத்திவிசில் அமர்கிறார்.

அமோக வெற்றியைக் கைபற்றியிருந்தது அதிமுக. அப்போது காங்கிரஸ் கட்சிக் காரர்களே குறையாகக் கூறியது என்னவென்றால் காங்கிரஸின் படுதோல்விக்குக் காரணம் வேட்பாளர் தேர்வுதான். எந்த பண்பும், தகுதியும் இல்லாதவர்களை வேட்பாளர்களாக களமிறக்குவதுதான் தோல்விக்கு காரணம் என்று பளீர் கருத்துகளை காற்றில் கசியவிட்டனர்.

பீகார் தேர்தலையே எடுத்துக்கொள்வோம் , கடந்த தேர்தலில் 3 இடங்கள் வென்ற சிபிஐ(எம்.எல்) இந்தத் தேர்தலில் 11 இடங்கள் வென்றிருக்கிறது. அவர்களின் இந்த ஏறுமுகத்திற்கு காரணம் என்ன? முழுக்க முழுக்க தொண்டர் பலம்தான். இளைஞர் சக்திதான். அந்த இளைஞர்களுக்கு கட்சி அளித்த ஊக்கம்தான் தூக்கம் மறந்து அவர்களை களமாடச் செய்தது. தேர்தல் பிரச்சாரங்களில் ஒன்று கூட சுவடைப் போகவில்லை, கூட்டத்தை கூட்டி களைகட்டச் செய்தனர். இந்தப் புதுபுத்துணர்ச்சிக்கு மற்றொரு காரனம் கட்சியின் மாணவர் அமைப்பான ஐ.ஐ.எஸ்.ஏவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேரை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வைத்ததுதான். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மானவர்களும் இளைஞர்களும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினர். காங்கிரஸ் இம்மாதிரி செயல்படவில்லை, அதனால் கூட்டணியும் வலுவிழந்தது.

தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியலில் பாஜகவிற்கு முக்கிய மாற்றாக இருக்க விரும்பினால், காங்கிரஸ் கட்சி தன்னை புனரமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கட்சிக்கு ஆணிவேர் அதன் இளைஞர் சக்திதான். ஒரு கட்சிக்கு அறணாகவும் அடிநாதமாகவும் இருப்பது அதன் கடைநிலை தொண்டர்கள். காங்கிரஸ் கட்சி அவற்றை இழந்துவிட்டது. இனிமேல் உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும், அப்போதுதான் இளைஞர் பட்டாளம் களத்தில் பங்கேற்கும். காங்கிரஸ் தன்னுடைய தற்போதைய நிலையை உணர்ந்துகொண்டு, புனரமைக்கும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளது. அதனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேரம் பேசும் நிலையில் இல்லை, குறிப்பாக பீகார் தேர்தலுக்கு பிறது தமிழகத்தில் அவர்களால் பேரம் பேசவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று பீகார் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வந்த நெட்டிசன்கள், திமுகவின் ஐ.டி.விங் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் அடுத்து நடக்கவிருக்கும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்று அக்கறையோடு எச்சரித்துள்ளனர். திமுகவின் மூத்த நிர்வாகிகளோ காங்கிரஸை வைத்திருப்பது எக்ஸ்ட்ரா லக்கேஜ்தான் கழற்றிவிட்டுவிடுவோம் என்ற அளவில் பேசியிருக்கிறார்கள். சரி! முந்தையத் தேர்தல்களிலிருந்து, குறிப்பாக பீகார் தேர்தலிலிருந்து காங்கிரஸுக்கு ஏதேனும் படிப்பினை இருந்தால், அதன் பணியாளர்களை மறுசீரமைத்து, உற்சாகப்படுத்தி, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் திட்டத்தை வகுத்து புனரமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி நிர்வாகிகளை தலைமையின் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையும் பீகார் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளிலிருந்து காங்கிரஸ் உணர்ந்திருக்கும்… நொந்து போயிருக்கும் காங்கிரசுக்கு நொங்கு சர்பத் அடுத்தத் தேர்தலிலாவது கிடைக்குமா என்று பார்ப்போம்.

ஒட்டடைத் தெம்பில் கட்டிடம் தொங்குவதுப்போல் இருக்கிறது காங்கிரசின் தற்போதைய நிலை.

எழுத்து : அஜெய்வேலு