சென்னையில் கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து பாலியல் கும்பல் ஒன்று செயல்பட்டு வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் பலரும் வருமானம் இழந்து தவித்து வரும் நிலையில், அதில் சிலர் பல விதமான குற்றச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபடவும் தொடங்கி உள்ளனர்.

இன்னும் சிலர், தற்போது நிலவும் கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி சீக்கிரம் பணக்காரன் ஆக முடிவு செய்து, பல விதங்களிலும் தப்பான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான ஒன்று தான், தற்போது சென்னையில் அரங்கேறி இருக்கிறது.

சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில், இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவிலான ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக, அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக, தண்டையார்பேட்டை போலீசார்  குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் சென்று உள்ளனர். அப்போது, அந்த வீட்டில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததை நோட்டமிட்டனர். 

அத்துடன், போலீசார் சாதாரண உடை அணிந்து, குறிப்பிட்ட அந்த வீட்டிற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்து பார்த்து உள்ளனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது தெரிய வந்தது கண்டு, போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும், அந்த வீட்டில் கணவன் - மனைவியே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கணவன் - மனைவி உட்பட அங்கிருந்த 7 பேரை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து அந்த 7 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது, சென்னையில் கணவனை பிரிந்து வாழும் பெண்களின் மன நிலையை பேசி அவர்களின் மனதை மாற்றி, இங்கே அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, சில சிறுமிகளை வலுக்கட்டாயமாகக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் வாக்குமூலம் பெற்று, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் படி, நீதிமன்ற உத்தரவுப் படி, கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், கடந்த மாதம் கூட திருமண வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, ஆசை ஆசையான வார்த்தைகள் கூறி இளம் பெண்களிடம் இருந்து நகை பறிக்கும் மேட்ரிமோனியல் மோசடி மன்னனை, போலீசார் திருவண்ணாமலையில் வைத்து கைது செய்தனர். 

இப்படியாக, இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதோ, வழக்கத்தை விட சற்று அதிகரித்தும் காணப்படுவது பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.