கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணியை காணொளி காட்சி மூலம் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று முதல் நாட்டின் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அக்காணொளியில் பேசிய மோடி, ’’ இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றல் மற்றும் வலிமையை உலகிற்கு காட்டியுள்ளது. தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்’’ என்றார்.


இந்நிலையில் தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய முதல்வர், ’’ பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.


முன்னதாக தமிழகத்தில் 226 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு இருந்தது. தற்போது 166 இடங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் நமக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான், இதை நம் நாட்டு சம்மந்தப்பட்ட பிரச்னையாக அனைவரும் பார்க்க வேண்டும்.


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்குத் தான் போடப்படும். முதல் டோஸ் செலுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு, 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். நமது உயிரை காப்பாற்றும் மருத்துவர்களே இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார்கள், நான் நிச்சயமாகப் போட்டுக்கொள்வேன்” என்று தெரிவித்தார்.