சென்னையில் சிறார் ஆபாசப் படத்தை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்த சென்னை இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சிறுவர் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது.

சிறார்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்கும் விதமாகத் தமிழக காவல்துறை கடந்த சில மாதங்களாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதனால், சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மற்றும் பரப்புவர்கள் தொடர்பான விபரங்களை போலீசார் சேகரித்து வந்தனர். மேலும், அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர், சிறார் ஆபாசப் படங்களைப் பரப்பியதாக முதன் முதலாகக் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையில் சுமித் குமார் கல்ரா என்ற தொழிலதிபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் தொடர்பாக போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில், சென்னை அம்பத்தூரில் பி.எஸ்.சி. படித்த பட்டதாரி இளைஞர் ஹரிஸ் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2 வருடங்களாக சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறார் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதனால், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில், பீதியில் உரைந்துபோய் உள்ளனர்.