கள்ளக் காதல் விவகாரத்தில், ஓடும் ரயிலிலிருந்து கணவனைக் கீழே தள்ளி மனைவி கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஒரு ஆன்மிக சொல் உண்டு. ஆனால், அனைவருக்கும் ஆசைப்படலாமா?”

சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜேந்திரன், அப்பகுதியில் மெக்கானிகாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினிக்கு, பக்கத்துத் தெருவில் உள்ள அனுராக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், அஸ்வினி நாள்தோறும் அனுராக்குடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இது குறித்து ராஜேந்திரனுக்குத் தெரிய வரவே, மனைவியை அழைத்துக் கண்டித்துள்ளார். இது தொடர்பாகக் கணவன் - மனைவிக்கு இடையே தினமும் சண்டை வந்துள்ளது.

இதனிடையே, மனைவி திருந்தி வாழ வேண்டி முருகப் பெருமானுக்கு வேண்டிக்கொண்ட ராஜேந்திரன், திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு, ரயிலில் திருத்தணிக்குச் சென்றுள்ளார்.

அப்போது, முகத்தை மறைத்துக்கொண்டு அவரை பின் தொடர்ந்து வந்த 4 பேர், ரயிலிலிருந்து ராஜேந்திரனைக் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ரயிலிலிருந்து தவறி விழுந்து விட்டதாக நினைத்து விசாரித்துள்ளனர். ஆனால், தான் தவறி விழ வில்லை என்றும், தன்னை 4 பேர் கீழே தள்ளிவிட்டதாகவும் கூறி உள்ளார். அப்போது, ரயில் மெதுவாகச் சென்றதால், உயிர் தப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனக்கு தன் மனைவி மேல் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, அவருடைய கள்ளக் காதல் பற்றி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவரது மனைவி அஸ்வினியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அனுராக் மூலம் கணவனைக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

பின்னர், கொலை முயற்சியில் ஈடுபட்ட அனுராக்கின் நண்பர்கள் கமலேஸ்வரன், தினேஷ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.