காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தையறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞனை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனியில் உள்ள ஒரு வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த 13 வயதான வனிதா, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

வனிதா வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில், 20 வயதான நித்யா என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, வனிதாவை ஒரு தலையாக நித்யா, காதலித்து வந்துள்ளார். வனிதாவிடம் பல முறை காதலை கூறியும், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி, வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நித்யா, மாணவியிடம் மீண்டும் காதலை கூறி உள்ளார். ஆனால், காதலை ஏற்க மாணவி விடாப்பிடியாக மறுத்ததால், கடும் ஆத்திரமடைந்த நித்யா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வனிதாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில், மாணவி வலியால் அலறி துடித்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, மாணவியின் கழுத்தை அந்த இளைஞன் அறுத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் கூடியதைப் பார்த்ததும், நித்யா அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளான். உடனடியாக ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, மாணவிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நித்யாவை வலைவீசித் தேடினர். பின்னர், அவனது செல்போனை வைத்து, நித்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, சென்னையில், காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை, இளைஞர் ஒருவர் கழுத்தையறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.