தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் செபி குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி கூறியது.

இந்நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த பிப்ரவரி 18-ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் இதன் தொடர்ச்சியாக, தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் மேலாண் இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த மாதம் 24-ம் தேதி இரவு சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூடுதலாக இருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன்படி, ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் ஆனந்த் சுப்ரமணியனை கைது செய்து டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் இமயமலை சாமியார் எனவும், அவர் தான் சாமியார் போல் நடித்துள்ளதாகவும், அவரிடம் தெரிந்தே சித்ரா ராமகிருஷ்ணன் பல ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல மர்மமான சாமியார் வேடத்தில் உள்ள சுப்ரமணியனே பங்கு சந்தை முடிவுகளிலும் தலையிட்டுள்ளார். சுப்ரமணியனுக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார்கள், ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் என சிபிஐ தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இப்போது 3-வது முறையாக இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தநிலையில் அதற்கும் சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அதாவது இருவரும் தங்களின் அதிகாரம், செல்வாக்கால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் அழித்துவிடுவார்கள். குற்றம்தன்மை, குற்றத்தின் இயல்பு ஆகியவை தீவிரமானது என சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால், சித்ரா, ஆனந்த் ஆகியோரின் ஜாமீன் மனு விசாரணையை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் என்எஸ்இக்கு ஏற்படுத்திய இழப்புக்காக ரூ.2.05 கோடி இழப்பீடு கேட்டு பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் ரூ.2.05 கோடியைச் செலுத்தாவிட்டால், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.