கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததால், வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பரவி வரும் கொரரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இதனால், சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரபு நாடுகளிலும் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், உலக பொருளாதாரம் மந்த நிலை அடைந்துள்ளது.

இதன் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே வீழ்ச்சியுடன் காணப்பட்ட நிலையில், இன்று கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் வரலாறு காணாத கடும் சரிசை சந்தித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,177 புள்ளிகள் சரிந்து, 29,600 புள்ளிகளில் வணிகமானது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 966 புள்ளிகள் சரிந்து, 8,624 புள்ளிகளில் வர்த்தகமானது.

சென்செக்ஸ் வீழ்ச்சியால் 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக வங்கி, பெட்ரோலியம், உலோகம் ஆகிய தொழில்களைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியடைந்தன.

இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததால், வர்த்தகம் தற்போது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.