“அண்ணாத்த” ரஜினிகாந்தின் அரசியல் தர்பார் தற்போது தொடங்கி உள்ளது. 

சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில்  செய்தியாளர்களைச் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் வந்தபோது, அவரது ரசிகர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

Chennai RajinikanthPressMeet on Politics

இதனையடுத்து, செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று நான் கடந்த வாரம் கூறியிருந்தேன். 
என்னுடன் பேசிய விசயத்தை மாவட்டச் செயலாளர்கள் யாரும் வெளியிடவில்லை. மாவட்டச் செயலாளர்கள்  சந்திப்பு குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு.” என்று பேசத் தொடங்கினார்.

“என்னுடைய அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை இப்போது கூறுகிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று பீடிகை போட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் “கடந்த 1995 முதல் அரசியலுக்கு வர உள்ளதாக நான் ஒரு போதும் கூறியது இல்லை. அரசியல் வருகை குறித்து நான் முதன் முறையாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெளிப்படையாகப் பேசினேன்.

ஒருவேளை அரசியலுக்கு வந்தால், எப்படி இருக்க வேண்டும் என்று 1996 முதல் யோசித்துக் கொண்டிருந்தேன். 2016 - 2017 ஆம் ஆண்டுகளில்  தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால், அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். அரசியலுக்கு வர உள்ளதை அறிவித்த பிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை என்று கூறினேன்.

சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பது போன்றதாகும்” என்று வெளிப்படையாக அதிரடியாகப் பேசினார். 

மேலும், “திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் தலா 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் உள்ளன. தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை. தேர்தல் முடிந்த பிறகு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை இல்லை. 

Chennai RajinikanthPressMeet on Politics

ஆட்சிக்கு வந்த பிறகு ஆளும்கட்சி பிரமுகர்கள் கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களில், தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. சிலர் கட்சிப் பதவிகளைத் தொழிலாகவே செய்கிறார்கள், அவர்களுக்கு வேறு வேலையே இல்லை.

நான் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் சமயத்தில் மட்டும் கட்சிக்கு புதிய பதவி, தேர்தல் முடிந்த பிறகு அந்த பதவிகள் தேவையில்லை. நான் ஆரம்பிக்கும் கட்சியில் தேவையான அளவிற்கு மட்டுமே நிர்வாகிகளை வைத்துக் கொள்ளப்போகிறேன்” என்று அரசியல் நிலைப்பாடு குறித்து புட்டி புட்டு வைத்தார்.

அதேபோல், “சட்டப்பேரவையில் வயதானவர்கள் தான் அதிக எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். 50 மற்றும் 45 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அரசியல் கட்சி வாரிசுகளால் தான் குறைந்த வயதில் எம்.எல்.ஏ.க்களாகின்றனர். ஆனால், எனது கட்சியில் 60 முதல் 65 சதவீத எம்.எல்.ஏ. சீட்டுகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

வேறு கட்சியில் உள்ள திறமையானவர்கள் வந்தால், அவர்களுக்கு 30 முதல் 35 சதவீத எம்.எல்.ஏ. சீட்டுகள் வழங்குவேன். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். மற்றும் நீதிபதிகளை அரசியலுக்கு அழைத்து வர இருக்கிறேன். 

இளைஞர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு செல்வது புது மின்சாரம் பாய்ச்சுவது போல் இருக்கும். இளைஞர்கள், திறமையானவர்கள் சட்டப்பேரவைக்கு செல்ல நான் ஒரு பாலமாக இருப்பேன்” என்று ரஜினிகாந்த், தனது அரசியல் தர்பாரை தொடங்கி உள்ளார்.