"முதல்வர் பதவியை நான் நினைத்துகூட பார்த்ததில்லை" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “தேசிய கட்சிகளைத் தவிர மாநில கட்சிகளில் ஒரே நபர் கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளனர். கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான், எனது அரசியல் நிலைப்பாடு. 

Rajinikanth political speech

கட்சித் தலைமையில் இருப்பவர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைக் கண்காணிக்க வேண்டும். கட்சித் தலைமை கொடுக்கும் ஆலோசனைகளை செயல்படுத்துவது, ஆட்சியில் இருப்பவர்களின் கடமை. 

முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் உள்ளிட்டோர் 2 முறை என்னை அழைத்துக் கேட்டும், முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று நான் கூறிவிட்டேன்.

முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை. இளைஞனாக, படித்தவனாக, தொலை நோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக அமர வைக்க வேண்டும்” என்று,  முதல்வர் பதவி மீது தனக்கு இல்லாத நாட்டத்தை வெளிப்படையாகவே மனம் திறந்து பேசினார். 

மேலும், “ஆட்சித் தலைமை சரியாக இல்லை என்றால், கட்சித் தலைமை தூக்கி எறிய வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களைக் கட்சித் தலைமை உள்ளிட்டவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நான் நினைத்தேன்.

கட்சியில் பதவிகள் நிரந்தரமாக இருக்காது என்று நான் கூறுவதை பலர் ஏற்கவில்லை. முதலமைச்சர் வேட்பாளராக நான் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் என்னிடம் கூறுகிறார்கள். 

Rajinikanth political speech

நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால், என் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள் என்று என்னிடம் கூறுகின்றனர். நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை, என் மாவட்டச் செயலாளர்கள் கூட ஏற்கவில்லை. 

முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று நான் கடந்த 2017 ஆம் ஆண்டே கூறியுள்ளேன். மாற்று அரசியல் கொண்டு வர வேண்டும், நல்ல அரசியல் தலைவர் வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணாவைப் போல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தலைவர்கள் தான், தமிழக அரசியலை ஆட்கொண்டிருந்தனர்,

ஆனால், தமிழகத்தில் தற்போது திறமையான தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?” என்று நடிகர் ரஜினிகாந்த் பீடிகை போட்டார். இதனால், அரங்கமே அமைதியானது.