தமிழக பாஜக தலைவராகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன், கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

L Murugan appointed BJP Tamil Nadu president

இதனையடுத்து, தமிழக பாஜக தலைவருக்கான பதவி கலியாகவே இருந்தது. இதனைத்தொடர்ந்து, அந்த பதவிக்கு வானதி சீனிவாசன், நடிகர் எஸ்.வி.சேகர், எச்.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் போட்டியிட்டதாகத் தகவல் வெளியானது.

இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, காலியாக உள்ள மாநில தலைவர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானா பாஜக தலைவராக முன்னாள் எம்.பி. சஞ்சய்குமாரை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்தார்.

L Murugan appointed BJP Tamil Nadu president

இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவராகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகனை, ஜே.பி.நட்டா நியமனம் செய்து உத்தரவிட்டார். 

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக தற்போது பதவி வகித்து வரும் எல்.முருகன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகக் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 

தமிழகத்தின் பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியைத் தந்துள்ளார்கள்.  அதற்கேற்றவாறு நான் திறம்படச் செயல்படுவேன்” என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.