“2021ல் நான் முதலமைச்சராகலாம் என நினைத்துள்ளேன், ஆனால் சிலர் அதனைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்” என்று நடிகர் வடிவேலு கலகலப்பாகப் பேசி உள்ளார்.

நடிகர் வடிவேலு திருச்சேந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்ததாக” தெரிவித்தார்.

Vadivelu plans to become chief minister in 2021

அப்போது, “சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “திருச்சேந்தூர் முருகன் அதை பார்த்துக்கொள்வார்” என்று கூறினார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவர் நேற்று பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த நடிகர் வடிவேலு, “ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, ஏன் அவருக்கே தெரியாது” என்று கலகலப்பாகப் பதில் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, ரஜினியின் முதலமைச்சர் ஆசை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த வடிவேலு, “கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. நல்லது தானே, மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். நல்ல விசயத்தை யார் செய்தால் என்ன?” என்று இயல்பாகப் பேசினார்.

அத்துடன், உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குக் கொஞ்சம் சிரித்துக்கொண்டே பேசிய வடிவேலு, “ நான் 2001 ல் முதலமைச்சர் ஆகப் போகிறேன்” என்று கூறிவிட்டுச் சிரித்தார். 

Vadivelu plans to become chief minister in 2021

அப்போது, சுற்றி நின்றவர்கள்.. “அது, 2021” என்று திருத்தி சொன்னார்கள். உடனடியாக சுதாரித்துக்கொண்ட நடிகர் வடிவேலு, ஆமா ஆமா, 2021 ல் முதலமைச்சர் ஆகப் போகிறேன். ஆனால் சிலர் அதனைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறி சிரித்துவிட்டு,

“நான் எங்க நின்னாலும் ஓட்டுப்போடுவிங்கள?” என்று வடிவேலு கேள்வி கேட்க.. அதற்கு, “ஓட்டுப் போடுவோம்” என்று செய்தியாளர்கள் கோரசாக சொல்ல.., “அப்ப நான் தான் CM”  என்று தனக்கே உண்டான பாணியில் கூறிவிட்டு, நடிகர் வடிவேலு கலகல வென்று சிரித்துவிட்டார். இதனால், அந்த இடமே சிரிப்பலையானது.