தமிழகத்தில் இன்று ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 68 பேர் உட்பட, 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக, 4 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணிகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழகம் தனது இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பி வருவதாகக் கருதப்பட்ட நிலையில், கொரோனாதான் தாக்கம் சற்றும் குறையாமல் அதே அளவில் இருந்துகொண்டிருப்பது, அனைத்து தரப்பினரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து வந்த 6 பேருக்கும், ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா, உத்தரப்பிரேதசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தலா ஒருவருக்கும் என கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை கீழராஜவீதி மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரிந்து வந்த நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் பணிபுரிந்து வந்த வங்கிக்குச் சீல் வைக்கப்பட்டு, அங்க பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 13,967 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கடலூரில் கொரோனாவால் பாதித்த 13 காவலர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கடலூரில் கொரோனாவால் பாதித்த 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அவர்களை பேண்ட் வாத்தியம் முழங்க, மலர் தூவி சக காவலர்கள் வரவேற்றனர்.

குறிப்பாக, மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்றும், ஜூன் மாதத்திற்குப் பிறகு தொடங்கலாம் என்றும், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.


மேலும், தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னையைத் தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல், ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்கலாம் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே, கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறுவதற்குப் பதில் மக்களின் பசியைப் போக்கிட அனைவரும் முன்வர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.