புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 67 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

புத்தாண்டை வரவேற்று உலகமே கொண்டாடிக்கொண்டிருந்த தருணத்தில் குவா குவா சத்தம் உலகம் முழுக்க கேட்டுள்ளது. இவற்றில் இந்தியாவில் மட்டும் 67 ஆயிரம் முறை இந்த குவா குவா சத்தம் கேட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு முதல், இரவு 11.59 மணி வரை பிறந்த குழந்தைகள் விபரங்களை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளன. இது, மொத்த எண்ணிக்கையில் 17 சதவீதமாகும். இதனால், புத்தாண்டு தினத்தில் அதிக குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் சீனாவில் 46 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல், நைஜீரியாவில் சுமார் 26 ஆயிரம் குழந்தைகளும், பாகிஸ்தானில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகளும் பிறக்கவுள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பிஜி தீவில் 2020 ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. புத்தாண்டு அன்று கடைசி குழந்தை, அமெரிக்காவில் பிறந்துள்ளது.