5 போலீசாருக்கு அபராதமாக ஒரு மாதம் சம்பளத்தைச் செலுத்த உயர் அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில், கடந்த ஜீலை மாதம், முன் விரோதம் காரணமாகக் கலவரம் ஏற்படும் என்று அப்பகுதி பழங்குடி மக்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், போலீசார் அதனைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

இதனையடுத்து, அங்கு கடந்த ஜீலை 17 ஆம் தேதி, இரு தரப்பினர் இடையே கலவரம் வெடித்தது.இதில் 11 பழங்குடியின விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், சம்பவம் நடந்து 6 மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சோன்பத்ரா உயர் போலீஸ் அதிகாரி ஸ்ரீவஸ்தவா, புகாரை வாங்க மறுத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தவறிய மற்றும் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்ட, சம்மந்தப்பட்ட 5 போலீசாருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, 5 போலீசாரும் தங்களது ஒரு மாதம் சம்பளத்தை அபராதமாகச் செலுத்தி, டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்கான நோட்டீஸ் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 5 போலீசாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சக போலீசாரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.