உலக அளவில் 4.23 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் கோரா தாண்டவம் உலகையே ஆட்டி படைத்து வருகிறது. அதன்படி, சுமார் 200 உலக நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

கொரோனா வைரஸ் உருவான சீனாவில், இந்த வைரஸ் கட்டுக்குள் வந்தாலும், அதன் பாதிப்பு இத்தாலி, அமெரிக்கா, பிரான்சு, ஸ்பெயின், இந்தியா என உலகம் முழுக்க அதி வேகமாகப் பரவி வருகிறது.

அதன்படி, உலக அளவில் 4.23 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 388 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அதே நேரத்தில், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 887 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில், புதிதாக 5249 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 743 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 6 ஆயிரத்து 820 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 514 பேரும், பிரான்ஸ் நாட்டில் 240 பேரும், ஈரானில் 122 பேரும், அமெரிக்காவில் 114 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக அமெரிக்காவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.