கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாகத் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவின் கோர பிடியில் உலகமே சிக்கியிருக்கும் நிலையில், தமிழகமும் அதற்கு விதிவிலக்கில்லை. தமிழகத்தில் கொரோனா மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் இந்தியா அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு 2 வது இடத்திலிருந்த நிலையில், தற்போது தமிழகம் 3வது இடத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாகத் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர், தேனி, நாமக்கல், விருதுநகர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், சேலம், திருவாரூர், நாகை ஆகிய 22 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளன.

மாவட்டங்களில் 15 பேருக்கு மேல் இருந்தால், அந்த மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இந்த தளர்வானது ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குப் பொருந்தாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், கொரோனோ தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இதுவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.