கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 1500 சில்லறை விற்பனை கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 வதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோயம்பேடு மர்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகளுடன் சில கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றாம் செய்வது தொடர்பாக நேற்று நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற 2 வது கட்ட பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேட்டில் சில்லறை வியாபாரம் செய்வதற்குச் சென்னை மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது.

மாநகராட்சியின் முடிவை மொத்த வியாபாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, கோயம்பேடு சந்தையில் 1900 மொத்த விற்பனை கடைகளில், 600 க்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைந்தகரையில் 450 சில்லறை விற்பனை கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கோயம்பேட்டில் உள்ள 1500 சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனால், மாநகராட்சி அதிகாரிகளின் நிபந்தனையை ஏற்க மறுத்து, கோயம்பேடு சிறு வியாபாரிகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.