ஊரடங்கு உத்தரவை மீறியதாகத் தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 1,25,793 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

144 தடை உத்தரவு போடப்பட்ட தொடக்கத்தில் சாலையில் பயணித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் பொதுமக்கள் தடை உத்தரவை மீறியதால், அவர்கள் மீது தடியடியும், சில இடங்களில் நூதன தண்டனைகளும் வழங்கப்பட்டன. ஆனாலும், அதையும் மீறி பல ஆயிரம் பேர் சாலைகளில் விதிமுறையை மீறி செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தடை உத்தரவு போடப்பட்ட கடந்த 7 நாட்களில், தமிழகத்தில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட சுமார் 1,25,793 பேர் கைதாகி ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

மேலும், தடையை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்ததாக சுமார் 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 85,850 வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, கடந்த 7 நாட்களில் இதுவரை தமிழகம் முழுவதும் 39,36,852 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.