இரவில் ஊரடங்கு விதித்துவிட்டு பகலில் லட்சக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்க அழைப்பதா என சொந்த கட்சிக்கு எதிராக வருண் காந்தி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 19 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 25 ஆம் தேதியில் இருந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 200 பேர் மட்டும் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐ.எம்.ஐ.எம். உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.

தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பா.ஜ.க .உள்பட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் உத்தரப்பிரதேசத்தில் இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் பகல் நேரத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து பாஜக எம்.பி.யான வருண் காந்தி தனது சொந்த கட்சியையே விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப்பிரதேசத்தில் ஒமிக்ரான் பரவலை தடுக்க இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பகலில் லட்சக்கணக்கான மக்களை கூட்டி பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

இந்த நடவடிக்கைகள் சாதாரண மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்புகள் ஓரளவிற்கு தான் இருக்கிறது. எனவே ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு முக்கியத்துவம் தரப் போகிறார்களா? இல்லை உங்களின் தேர்தல் பலத்தை காட்ட விரும்புகிறார்களா? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும்” இவ்வாறு வருண் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தப் பதிவு அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும் என்றாலும் உத்தரப்பிரதேசத்தை ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசை விமர்சிப்பதாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில் வரும் 2022 சட்டமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் பிரதமர் மோடி தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனால் தனது கட்சி தலைமையையே விமர்சிப்பதாய் வருண் காந்தி செயல்பாடுகள் இருப்பதாக கருத்துகள் நிலவுகின்றன. இந்தப் பதிவில் உள்ள தகவல்கள் உண்மை தான் என்று பலரும் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.

சமீப காலமாகவே கட்சி தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி கருத்து தெரிவித்து வருவதை கவனிக்க முடிவதாக கட்சிக்கு சலசலப்பு நிலவுகிறது. மேலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருண் காந்தி வலியுறுத்தியிருந்தார்.

மேலும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் கூறி வருண் காந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து உத்தரப் பிரதேச மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் வெளியானதை ஆளும் அரசை கண்டித்து அவர் பேசியிருந்தார்.

தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள், தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை அரசை விமர்சிக்கும் வகையில் வருண் காந்தி பதிவிட்டிருப்பது ஆளும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வருண் காந்தி பா.ஜ.க.வில் இருந்துக்கொண்டே தலைமையை விமர்சிப்பதாக அக்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.