இந்தியரை கனடா நாட்டு பெண் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கான சான்றிதழை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

கனடாவை சேர்ந்தவர் அனுபிரீத் கவுர் இந்திய வம்சாளியை சேர்ந்த அனுபிரீத் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இதற்கிடையில் அனுபிரீத் கவுர் இந்தியரான நவ்ஜத் ரந்திவாலா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்த திருமணம் நடைபெற்றதற்கான சான்றிதழை வழங்கும்படி அனுபிரீத் கவுர் குவாலியரில் உள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் திருமண சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதிகள் மீண்டும் கனடாவுக்கு சென்றுள்ளனர்.

அதற்கிடையில் இரண்டாவது முறையாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக கவுர் மீண்டும் இந்தியா வந்துள்ளார். அந்த முறை திருமண சான்றிதழ் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் வழங்குமாறு கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் உள்ள ஊழியர் கவுரிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

மேலும் ஊழியர் லஞ்சம் கேட்டது தொடர்பாக அப்போது கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த அதிகாரியிடம் கவுர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து அந்த ஊழியரை அதிகாரி எச்சரித்தார். ஆனால் அந்த முறையிம் திருமண சான்றிதழ் வழங்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கனடாவில் இருந்து அவசர விசா பெற்றுக்கொண்டு கவுர் இந்தியா வந்துள்ளார். இந்த முறை அதிகாரிகள் பணம் எதையும் கேட்கவில்லை ஆனால் தனது திருமண சான்றிதழை வழங்குவதில் காலம் தாழ்த்துவதாக அதிகாரிகள் மீது கவுர் குற்றம்சாட்டியுள்ளார். திருமண சான்றிதழ் பெறுவதற்காக மூன்று முறை இந்தியா வந்துள்ளதாகவும் மொத்தம் 9 லட்ச ரூபாய் செலவாகியுள்ளதாகவும் கவுர் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில் மேலும் திருமண சான்றிதழ் வழங்காமல் ஒராண்டுக்கு மேல் கனடா நாட்டு பெண் அலைக்கழிக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இது குறித்து கவுரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தனக்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதை அவர் மனக்குமுறலாக தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் செய்தியாளர்கள் மூலம் மாவட்ட கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருமண சான்றிதழ் வழங்காமல் ஓராண்டாக கனடா நாட்டு பெண் அலைக்கழிக்கப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட கலெக்டர் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கனாடா நாட்டு குடியுரிமைப்பெற்ற அந்த பெண்ணுக்கு திருமண சான்றிதழ் விவகாரத்தில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார் மாவட்ட கலெக்டர்.