காதலரை திருமணம் செய்வதற்காக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொய்யான புகார் கொடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரை ஒரு நாள் முழுதும் இளம்பெண் ஒருவர் அழைக்கழித்து சுற்றலில் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அவ்வப்போது நடைபெற்று  சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் நடக்காத பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒன்று காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக காவல்துறையை கலங்கடித்திருக்கிறார் 19 வயது இளம் பெண் ஒருவர். மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தான் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக திங்கள்கிழமை அன்று போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

பட்டப்பகலில் இப்படி ஒரு பயங்கர சம்பவம்  நடந்ததை அறிந்த நாக்பூர் நகர போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார், கூடுதல் காவல் ஆணையர் சுனில் புளரி மற்றும் பல மூத்த அதிகாரிகள் என அனைவரும் கல்மாணா காவல்நிலையத்தை வந்தடைந்தனர். 

அந்த இளம்பெண் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது, “நான் நடன வகுப்புக்கு இன்று காலை புட்டிபோரியில் இருந்து ராம்தேஸ்பத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு வெள்ளை நிற வேனில் 2 நபர்கள் என் அருகே வந்து விலாசம் ஒன்றைக் காட்டி, அங்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டனர்.

gang rape fake complaint

நான் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னை வேனுக்குள் இழுத்து தூக்கிப்போட்டு முகத்தை துணியால் மூடி எங்கோ கொண்டு சென்றனர்.  பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வேனை கொண்டுசென்று, அங்கு வைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்” இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை முழுவதுமாக கேட்டறிந்ததும், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொண்ட காவலர்கள் அடங்கிய 40 சிறப்பு படைகளை உருவாக்கி, நகரம் முழுவதும் உள்ள வேன்கள், 250 சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் மற்றும் அப்பெண்ணின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆணையர் அமிதேஷ் குமார் உத்தரவிட்டார்.

மேலும் அந்த இளம் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக மாயோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 

போலீசார் அந்தப் பெண் கூறிய வாக்குமூலத்தை மையமாக வைத்து எல்லா இடங்களிலும் இருந்த  சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் எந்தவொரு சி.சி.டி.வி. பதிவிலும் அந்த இளம்பெண் கூறியவாறு வெள்ளைநிற வேன் இல்லை.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்தப் பெண் சென்ற இடங்களை எல்லாம் சி.சி.டி.வி. பதிவின் மூலம் ஆய்வு செய்தனர். ஆறு மணி நேரத்துக்கும் மேலாக 50 பேரை விசாரித்தப் பின் அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லியுள்ளார் என்று காவல்துறை முடிவுக்கு வந்தனர்.

சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த பெண் சம்பவத்தன்று காலை 9.50 மணிக்கு நாக்பூரில் உள்ள வெரைட்டி ஸ்கோயர் பகுதியில் பேருந்து ஒன்றிலிருந்து இறங்கியுள்ளார். அதன்பின் 10 மணிக்கு ஜான்சி ராணி சதுக்கம் வரை நடந்து சென்றுள்ளார்.

10.15 மணிக்கு ஆனந்த் டாக்கீஸ் சதுக்கத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி பயணம் செய்துள்ளார். பின் 10.25 மணிக்கு மாயோ மருத்துவமனையில் இறங்கியுள்ளார். அதன்பின் அங்கிருந்து ஆட்டோ பிடித்து 10.54 மணிக்கு சிக்காலி சதுக்கத்திற்கு வந்து இளம்பெண் இறங்கியுள்ளார்.

nagpur gang rape fake complaint

பின்னர் காவல்நிலையத்தின் அருகே இருக்கும் பெட்ரோல் பங்க்கில் பதிவான சி.சி.டி.வி. பதிவில் அந்த இளம்பெண் புகார் கொடுக்க, கல்மாணா காவல்நிலையத்தை நோக்கி 11.04 மணிக்கு நடந்து வருவது பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தன் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக இவ்வாறு பொய் கூறியதாக உண்மையை ஒப்புக் கொண்டார். தான் பாலியல் வண்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரிந்தால்,  தான் விரும்பும் நபருக்கே தன்னை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணி இத்தகைய  பொய்யான குற்றச்சாட்டை அவர் பதிவு செய்ததும் தெரியவந்தது.

ஆனால் போலீசாரின் நிலை தான் பரிதாபம் ஆகிப் போனது. புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல், அந்தப் பெண்ணை சீரழித்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்னும் நோக்கில் அலைந்து திரிந்து விசாரணை மேற்கொண்டது கடைசியில் வீணாகிப் போனது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.