நமது நாட்டின் சந்திரயான்-1 விண்கலம், நிலாவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது. இருப்பினும் அது தண்ணீரின் மூலக்கூறுகளா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறுகளா எனப் பிரித்து அறிவதில் சிரமம் இருந்தது. தற்போது இந்த ஆய்வில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது நாசா.

இந்நிலையில், இதுவரை ஆய்வுகளில் கண்டிராத அளவுக்கு அதிக அளவுக்கு நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கிறது என்று அமெரிக்க தேசிய விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையம் நாசா உறுதி செய்துள்ளது.

சில பல ஆண்டுகள் முன்பு வரை நிலவின் மேற்பரப்பு ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து இருக்கக்கூடிய ஒரு பகுதி என்றுதான் கூறப்பட்டு வந்தது. ஆனால் படிப்படியான ஆராய்ச்சிகளின் முடிவில் அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அதுவும் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட தண்ணீரின் மூலக்கூறு இருக்கிறது என்பதற்கான மேலதிக கெமிக்கல் ஆய்வு முடிவுகளை நாசா வழங்கியுள்ளது.

நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மூலமாக, முன்பைவிட அதிக துல்லியமான அலைவீச்சு மூலமாக ஸ்கேன் செய்தனர் விஞ்ஞானிகள். அதாவது முன்பு மூன்று மைக்ரான் அலை நீளம் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஆறு மைக்ரான் அளவுக்கான அலைவீச்சு பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் நிறைய தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது நாசா. கிளாவியஸ் என்ற பள்ளமான பகுதியில் நீர் இருப்பு இருக்கிறது.

சந்திரனில் காணப்படும் தண்ணீர் எங்கே இருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு அங்கு சேமிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை புரிந்துகொள்ள மேலும் தீவிர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

சில இடங்களில் தண்ணீர் மிகவும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால், மனித குடியேற்றத்திற்கு அது உதவிகரமாக இருக்கும் என்கிறார் ஆய்வாளர் ஹோனிபால். அந்த தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம், சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கு, பயன்படுத்தலாம் ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாக பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இதுகுறித்து நாசா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

"சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, பூமியிலிருந்து தெரியும் மிகப் பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது" என்று நாசா தெரிவித்துள்ளது. 

மேலும், சந்திரனில் இவ்வாறு காணப்படும் தண்ணீர் அதிகளவில் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீரைக் கண்டுபிடித்தது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்களால், அது நீரின் மூலக்கூறா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறா என கணிக்க முடியவில்லை.

இவ்வாறு, தற்போது நிலவில் தண்ணீர் இருப்பை நாசா உறுதி செய்திருக்கிறது.

2019 ம் ஆண்டு இறுதியில், ``நிலவைப் பற்றி நாம் இன்று அறிந்து வைத்திருக்கும் மிக முக்கியமான விஷயம் அங்கே தண்ணீர் இருப்பதுதான். அது பனிக்கட்டி வடிவில் துருவப்பகுதிகளில் மறைந்திருக்கிறது. அதுவே நிலவில் மதிப்பில்லாத வளமாக இருக்கும் என ஜெஃப் பெஸாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பூமியில் மனிதனுக்குத் தேவையான ஆதாரங்கள் வேகமாகக் குறைந்து வரும் வேளையில், அதைச் சமாளிக்க நிலவில் குடியேறுவது ஒரு நல்ல தீர்வாக அமையக் கூடும் என்பது கருத்தாக இருக்கிறது. மேலும் விண்கலம் திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் என்பதால் எரிபொருள் தேவைப்படும் போது நிலவில் இருக்கும் தண்ணீர் அதற்கு உதவும். எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கு ப்ளூ ஆர்ஜினின் திட்டம் முதல்படியாக இருக்கும்" என உலக மில்லியனர்களின் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் தெரிவித்துள்ளார்.