இளம் பெண்கள் 58 சதவீதம் பேர் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர் கொள்கின்றனர் என்றும், இந்த கொடுமை 22 நாடுகளில் எதிரொலிப்பதாகவும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. 

இன்றைய அதிநவீன தொழிற்நுட்ப வாழ்க்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்பைவிட, தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது முற்றிலும் அதிகரித்து இருக்கிறது. இப்படி வேலைக்குச் செல்லும் பெண்கள் தற்போது அதிக அளவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்லாத இளம் பெண்களும், இல்லத்தரசிகளும் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், 22 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய உலகளாவிய ஆய்வு ஒன்றில்; பெண்கள், இளம் பெண்கள், சிறுமிகள் என்று இணையத்தைப் பயன்படுத்துவோர், ஆன்லைன் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோக துன்புறுத்தலுக்கு மிகப்பெரிய அளவில் ஆளாகி வருவது தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக, “உலக பெண்கள் அறிக்கை நிலை” என்ற தலைப்பில் இந்தியா, பிரேசில், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜப்பான், நைஜீரியா, தாய்லாந்து, அமெரிக்கா என்று, இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பான 'பிளான் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை  மேற்கொண்டது. 

“இந்த ஆய்வில், 58 சதவீதம் பேர் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், இந்த சமூக ஊடக தளங்களில் ஆன்லைன் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோக துன்புறுத்தலைப் பலரும் எதிர்கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது.

அதன்படி, “ஐரோப்பாவில் 63 சதவீத பெண்கள் இந்த ஆன்லைன் துன்புறுத்தல்களைச் சந்தித்து உள்ளதாகப் பதிவு” செய்து உள்ளனர், அதே போன்று, லத்தீன் அமெரிக்காவில் 60 சதவீதம் சிறுமிகளும், வட அமெரிக்காவில் 52 சதவீதம் பேரும், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் 58 சதவீத பெண்களும், ஆப்பிரிக்காவில் 54 சதவீத பெண்களும் இந்த பாலியல் துன்புறுத்தல்களை ஆன்லைன் மூலமாக சந்தித்து வருவது” தெரிய வந்திருக்கிறது.

இப்படி, “துன்புறுத்தப்பட்ட சிறுமிகளில் 47 சதவீதம் பேர், உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளனர் என்றும், 59 சதவீதம் பெண்கள்  ஆன்லைனில் தவறான மற்றும் அவமானகரமான ஆபாச சைகை மொழியை எதிர்கொண்டு வருகின்றனர்” என்றும், அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, “தாங்கள் சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட 37 சதவீத பெண்கள், தாங்கள் துன்புறுத்தப்படுவதாக” கருத்து தெரிவித்து உள்ளனர். 

முக்கியமாக, “சமூக வலைத்தளங்களில் நன்றாகத் தெரிந்தவர்களை காட்டிலும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து அதிக பாலியல் ரீதியான தொந்தரவை எதிர்கொள்கின்றோம்” என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

அதேபோல், “சிறுமிகளில் 11 சதவீதம் பேர் தற்போதைய அல்லது முன்னாள் நெருங்கிய நண்பர்களால் இதுபோன்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாக” அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், “23 சதவீதம் பேர் பள்ளி அல்லது பணி செய்யும் இடத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்கின்றோம் என்றும், 33 சதவீதம் பேர் முகம் தெரியாத நபர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகவும்” அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.