பிரதமர் மோடியின் முகநூல் பதிவை விட 40 சதவீதம் பேர் அதிகமாக ராகுல் முகநூல் பதிவை பார்த்துள்ளதாக காங்கிரஸ், கட்சி தெரிவித்துள்ளது. உலக அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பேர் தொடரும் முதல் 5 தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். முகநூலில் மட்டும் அவரை 4.5 கோடி பேர் தொடர்கின்றனர்.

அதே நேரம் ராகுலை 35 லட்சம் பேர் மட்டுமே தொடர்கின்றனர். இந்நிலையில் கடந்த செப்.,25 முதல் அக்., 2 வரையிலான காலகட்டத்தில் முகநூலில் ராகுலின் பக்கத்தில் 1 கோடியே 39 லட்சம் பேர் பார்த்து லைக்குகள், சேர்கள் செய்திருப்பதாகவும், கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும் காங்கிரஸ், கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், இதே நாட்களில் மோடியின் முகநூல் பக்கத்தை 82 லட்சம் பேர் மட்டும் பார்த்துள்ளனர் என்று காங்கிரஸ், கட்சி கூறியுள்ளது.

பிரதமர் மோடி செப்.,25 முதல் அக்.,2 வரை ஐ.நா., சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இடைப்பட்ட காலத்தில் 11 முறை முகநூலில் பதிவு செய்துள்ளார். உ.பி., ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ராகுல் முகநூலில் பல பதிவுகளை வெளியிட்டார். அதனால் அவருடைய முகநூல் பதிவுகளை அதிகம் பேர் பார்த்துள்ளனர். அவருடைய ஒரு பதிவுக்கு மட்டும் 4.5 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே ராகுல் காந்தி மோடிக்கு எதிராகவும் பாஜக அரசுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் தலித் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கொந்தளிப்பும் நாடு முழுவதும் இன்னும் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக சமீபத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு இருந்த அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒரு குழந்தை கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நிர்வாகமும் அவரது குடும்பத்தையே தாக்கி வருகிறது. நாட்டின் பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் சர்வதேச சதி இருப்பதாக மாநில அரசு கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, ‘யோகிஜி தனது கருத்தை கூறியிருக்கிறார். நான் அங்கு பார்த்தது என்னவென்றால், ஒரு அருமையான சிறுமி கற்பழித்து, கழுத்து உடைக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதை செய்த நபர்கள், அவரது குடும்பத்தையும் மிரட்டி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறினார்.

இப்படிப்பட்ட கொடூர சம்பவத்தை ஒரு ‘சோகம்’ என யோகி ஆதித்யநாத் கூறியிருக்க வேண்டும் என கூறிய ராகுல் காந்தி, இதை சர்வதேச சதியாக அவர் பார்த்தால் அப்படியே இருக்கட்டும் எனவும், அது அவரது தனிச்சிறப்பு என்றும் தெரிவித்தார்

இதேபோல கொரோனா தொடர்பாகவும், பாஜக அரசு இந்த நேரத்தில் என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துள்ளன - அதில் என்னென்ன தவறுகள் எழுந்துள்ளன என்பது குறித்தும் ராகுல் காந்தி மிகக்கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா நேரத்தில், மருத்துவம் சார்ந்த பிரச்னைகள் மட்டுமன்றி பொருளாதார பிரச்னைகள் குறித்தும் பேசியிருந்தார் ராகுல் காந்தி. தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.