"வரிசையா தங்கச்சி கேரக்டர்.. முதல்ல 'வேலாயுதம்' வேணான்னு சொல்லிட்டேன்!"- மனம் திறந்த நடிகை சரண்யா மோகன்! வைரல் வீடியோ

தங்கச்சி கேரக்டர் குறித்து மனம் திறந்து பேசிய சரண்யா மோகன்,Yaaradi nee mohini actress saranya mohan about her sister characters | Galatta

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சரண்யா மோகன். குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கி யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை சரண்யா மோகன் அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த நடிகை சரண்யா மோகன் தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “ஒரு நடிகை ஒரு கதாபாத்திரத்தில் செட் ஆகிவிட்டார் என்றால் தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்கள் தான் வந்து கொண்டே இருக்கும். தங்கச்சி கதாபாத்திரமா தங்கச்சி கதாபாத்திரத்திற்கு இவர் தான் என்று.. உங்களுக்கு அது எப்படி நடந்தது?” எனக் கேட்டபோது, “ஆமாம் அப்படியே முத்திரை குத்தி விடுவார்கள்.. ஆமாம் எனக்கும் இருந்தது அந்த ஒரு இமேஜ். இப்போது கூட இருக்கிறது. எப்போதும் வேலாயுதம் தங்கச்சி என வருகிறார்கள். இது ஒரு வகையில் ஆசீர்வாதம் தான் எவ்வளவோ பேர் நடிக்கிறார்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை அடையாளம் காண்கிறார்கள் என்றால் நல்ல விஷயம் தான். கொஞ்ச நாளுக்கு பிறகு எனக்கே போர் அடித்து விட்டது. தங்கச்சி கேரக்டரே செய்து கொண்டிருக்கிறோமே, நடிக்கிற கதாபாத்திரங்கள் எல்லாமே குறிப்பிடும்படியாகத்தான் இருக்கிறது. வெறும் வந்து போகக் கூடிய ஒரு கதாபாத்திரம் மாதிரி கிடையாது. வரிசையாக எப்போதுமே அதே மாதிரி கேரக்டர்கள் வந்து கொண்டு இருந்தபோது நானும் போதும் என்று நினைத்தேன். கொஞ்ச நாளுக்கு பிறகு ஒரு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்குமே என நினைத்து கொண்டிருந்த போது இந்த வெண்ணிலா கபடி குழு வந்தது. மீண்டும் இரண்டு மூன்று திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தேன். அப்போது மீண்டும் வேலாயுதம் படம் வந்தது. அப்போது இயக்குனர் ராஜா சாரிடம் முதலில், “சார் தங்கச்சி கேரக்டர் வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் நான் நடிக்க மாட்டேன்” என்று சொன்னேன். தளபதி விஜய் சார் உடன் நடிக்கிறேன் என்றும் சொன்னார்கள். பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் போது அங்கு கதாநாயகிகளுக்கே இரண்டு பாடல்கள் கொஞ்சம் இடையில் காட்சிகள் என வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இதில் தங்கச்சி கேரக்டர் என யோசித்தேன். பின்னர் கதை முழுவதும் சொன்ன பிறகு ஓகே இது பண்ணலாம் என முடிவெடுத்தேன். இப்போது கூட வேலாயுதம் தங்கச்சி என்று தான் கூப்பிடுகிறார்கள். கமெண்ட்களில் கூட விஜய் சார் தங்கச்சி என்று இல்லாமல் வேலாயுதம் தங்கச்சி என்று தான் வருகிறது. அது எனக்கு மிகவும் சந்தோஷம் தான்.” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை சரண்யா மோகன் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.