புரட்சி தளபதி விஷால் நடிக்கும் சக்ரா படத்தை நாளை பிப்ரவரி 19 அன்று இப்படத்தை வெளியிட திட்டமிருந்தனர் படக் குழுவினர். ஆனால், வெளியிடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இன்று தடை உத்தரவை நீக்கி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

இதுபற்றி விஷால் கூறியதாவது நான் எனக்கும், என் தொழிலுக்கும் எப்போதும் உண்மையாகவே உள்ளேன். ஆகையால், எப்போதுமே தடைகள், சிக்கல்களை எதிர் கொள்கிறேன். சக்ரா படத்திற்கு இருந்து தடை நீங்கி, நாளை உலகளவில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

நாளை பிப்ரவரி 19ஆம் தேதி சக்ராவிற்கான சிறந்த தினமாக இருக்கும். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மற்றும் சரியான நேரத்தில் படத்திற்கான தடையை நீக்கி உத்தரவை வழங்கிய உயர்நீதிமன்றத்திற்கு நன்றி. திட்டமிட்டபடி சக்ரா திரைப்படத்தை வெளியிட உள்ளோம், உண்மை எப்போதும் வெல்லும். இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார். 

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சக்ரா. இப்படத்தில் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் என்று விஷால் ட்ரைலரில் பேசிய வசனம் ரசிகர்களை கவர்ந்தது. 

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பைத் முடித்தனர் படக்குழு. படத்தின் பாடல்கள் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

விஷால் தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மிர்னாலினி ரவி, பிரகாஷ் ராஜ், கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடைசியாக மம்தா மோகன்தாஸ் படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.