தல அஜித்தை பொது இடங்களில் பார்ப்பது எளிது இல்லை. அதனால் அவரின் புகைப்படங்கள் ஏதாவது வெளியானால் ரசிகர்கள் துள்ளிக் குதிப்பார்கள். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு அஜித்துடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் ஷார்ட்ஸ், டி சர்ட், தொப்பியில் இருக்கிறார் அஜித். 

ஒரேயொரு புகைப்படத்தில் மட்டும் தொப்பி இல்லை. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த கெட்டப் நல்லா இருக்கே என தெரிவித்துள்ளனர். முன்னதாக அஜித் தன் காதல் மனைவி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அஜித்தின் மேலும் சில புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை தவிர பெரிதாக எந்த விபரமும் வெளியாகவில்லை. வினோத்தும், தயாரிப்பாளர் போனி கபூரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.

இதையடுத்து அஜித் ரசிகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள் என்று படத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களிடம் எல்லாம் அப்டேட் கேட்டார்கள். இதை பார்த்த அஜித் கோபம் அடைந்து அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்ததாவது, என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டிருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.