நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் புரட்சி தளபதி விஷாலுக்கு கொரோனா என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15, 20 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தை GK ரெட்டி கொரோனா டெஸ்ட் செய்துள்ளனர். ரிசல்ட்டில் அவருக்கு பாசிட்டிவ் என்பது தெரியவந்துள்ளது. தந்தையுடன் இருந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து பார்த்து கொண்ட நடிகர் விஷாலுக்கும் தொற்று பரவியுள்ளது. அவரது டெஸ்ட் ரிப்போர்ட்டும் பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. 

இதில் சுவையூட்டும் செய்தி என்னவென்றால், இருவருக்கும் நெகட்டிவ் என தற்போது டெஸ்ட் ரிப்போர்ட் வந்துள்ளதாம். ஆயுர்வேத மருந்துகள் உட்கொண்ட இவர்கள், கொரோனவை விரட்டி அடித்துள்ளனர். ஆயுர்வேத மருந்து சாப்பிடதால், இருவரின் உடல்நிலை சீராக இருக்கிறது என்ற செய்தி கிடைத்துள்ளது.  

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடித்துள்ள படம் சக்ரா. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால்.