உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகின் ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகின்றது. அந்த வகையில், தங்கள் நாட்டில் கொரோனா தொற்றே இல்லை என சாதித்து வரும் ஒரு நாடு, வட கொரியா. கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில், மிக மோசமான பாதிப்பை சந்தித்த நாடுகளில், தென் கொரியாவும் ஒன்று. இருப்பினும் தங்களின் அசாத்திய முயற்சியால் அதை வென்று காட்டியது தென் கொரியா. அண்டை நாடான வட கொரியாவோ, தன்னிடம் நோயாளிகளே இல்லையென்கிறது. 

இப்படி கொரோனாவே இல்லையென சொல்லும் வடகொரியாவில், தற்போது மாஸ்க் அணியாவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல், நாடு விட்டு நாடு, ஒரேமாதிரியான வீரியத்தோடு பரவும் அளவுக்கு வீரியம் நிறைந்தது என்பதால், அதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது உலகம். 

உலக சுகாதார நிறுவனம் சார்பில், கடந்த ஜூலை 9-ம் தேதியன்று, `இன்னும் 4 வாரங்களில், நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பானால், உலகின் அத்தனை நாடுகளும் முழு பொதுமுடக்கத்துக்கு செல்ல வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. இப்படி மருத்துவர்கள், வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் என அனைவருமே கைவிரித்துவிட்ட நிலையிலும், தங்கள் நாட்டில் கொரோனா தொற்றே இல்லை என வட கொரியா சாதித்தது. அடிப்படை காரணம் கூட இல்லாத வட கொரியாவின் இந்த பேச்சில் கொஞ்சம்கூட உண்மையில்லை என்றே பலரும் கருத்து சொல்லி வந்தனர்.

அதேபோல `சீனாவுக்கு மிக அருகில் உள்ள மற்றும் சீனாவுடன் அதிகளவிலான பொருளாதார, கலாச்சார ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள வட கொரியாவில் கொரோனா பரவாமல் இருக்க வாய்ப்பே இல்லை, வடகொரியாதான் திட்டமிட்டு அனைத்தையும் மறைக்கிறது' என பலரும் கூறி வருகின்றனர்.

இப்படியான சூழலில், தற்போது வட கொரியாவில் மாஸ்க் அணிவது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணிய தவறுபவர்கள் மூன்று மாதங்கள் வட கொரிய அரசாங்கத்திற்கான கட்டாய - கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைவரும் மாஸ்க் அணிகின்றார்களா என்பதை பரிசோதிக்க, உயர்நிலை பள்ளி மாணவர்கள் ரோந்து செல்வார்கள் என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, வடகொரியாவில் 70 சதவிகிதம் பேர் மாஸ்க் அணிவதில்லை என சொல்லப்படுகிறது. எவ்வளவு பேர் கண்டறியப்பட்டாலும், அனைவருக்கும் தண்டனை என்பதில் வடகொரிய அரசு கூறியிருக்கிறது.

இந்த அறிவிப்பு, உலக நாடுகளிடையே இரண்டு வெவ்வேறு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

* ஒன்று, மாஸ்க் அணிபவர்களுக்கு, கொரோனா கண்டிப்பாக வராது என்று இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது, மாஸ்க் அணியாதவர்க்கு, இவ்வளவு கடுமையான தண்டைனை ஏன்?

* மற்றொன்று,  கொரோனா இல்லாத ஒரு நாடு இப்படியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? எனில் வடகொரியாவில் கொரோனா பரவத்தொடங்கிவிட்டதென பொருள் கொள்ளலாமா? அப்படியெனில், அதை அந்நாட்டு அரசு ஏன் மறைக்க வேண்டும்?

இந்த சர்ச்சைகள், வடகொரியாவின் உள்நாட்டு அதிகாரிகள் சிலருக்கும்கூட இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், அந்நாட்டு அரசு சார்பில் அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. இன்னொரு பக்கம், பிற நாடுகளும்கூட மாஸ்க் கட்டாயப்படுத்தலில், இப்படியான ஏதேனும் கடும் நடவடிக்கையை முன்னெடுக்குமா என்ற பயமும் எழுந்துள்ளது.

 

- ஜெ.நிவேதா.