மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், `ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதால், முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வேதா இல்லத்தை நினைவில்லமாக்க, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையைச் சென்னை குடிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பானது இன்று காலையில் வெளியிடப்பட்டது.

இந்த இடத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணி அரசு சார்பில் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. இதற்காக, இழப்பீடுத் தொகையாகத் தமிழக அரசு ரூ.68.9 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

இதற்கு முன்பு போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதை முறியடிக்கும் வகையில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையைச் சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு தற்போது செலுத்தி உள்ளது.

24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்துக்கு இழப்பீடாக ரூ.68.9 கோடியைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தியுள்ளது. இதில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையைச் செலுத்த ரூ.36.9 கோடியும், ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க 29.3 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காகத் தமிழக அரசு கடந்த மே மாதம் பொது அறிவிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுத்தது.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்து அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட பகுதியில் உள்ள “வேதா நிலையம்” இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காகத் தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் போயஸ் காா்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், `போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையைத் தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் கருத்தைத் தெரிவிக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த ஆட்சேபனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பாா்க்க நாள்தோறும் பொதுமக்கள் அதிகமாக வருவர். இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சப்படுகின்றனர். அதேநேரத்தில் மனுதாரர் தரப்பு எதிர்ப்பையும் பரிசீலிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது' எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது, நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஊடகங்களில், `ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் எங்களுக்கே உரிமை உள்ளது. ஆகவே ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கேட்பேன். ஜெ.வின் வேதா இல்லம் மக்களுக்குப் போய்ச் சேராது; இது எங்கள் பூர்வீக சொத்து. ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்க எங்களை அணுகியிருந்தால் நாங்கள் ஒப்புதல் அளித்திருப்போம். வேதா இல்லத்திற்குள் இருக்கும் பொருட்களின் விவரங்களை அரசு வெளியிடாதது ஏன்? ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவது தொடர்பாகச் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்" என்று கூறியிருக்கிறார். 

இன்னொரு பக்கம், அதிமுக அமைச்சர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் இந்த ஒப்புதலுக்கு ஆதரவாக மகிழ்வுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம்" என்றும், செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், ``ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்ற முடியாவிடில் வரலாறு எங்களைச் சபிக்கும்" என்றும் கூறியிருக்கிறார்கள். 

- பெ.மதலை ஆரோன்.