புத்தம் புதிய கதைக்களத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2... உற்சாகத்தோடு வரவேற்கும் சின்னத்திரை ரசிகர்கள்!

புதிய கதைக்களத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2,vijay tv in pandian stores season 2 thanthai sol mikka manthiramillai started | Galatta

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக கொண்டாடப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாவது சீசனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது ஆரம்பமாகி இருக்கிறது. சின்னத்திரை ரசிகர்களுக்கு வெரைட்டியான கதைக்களங்களில் அட்டகாசமான மெகா தொடர்களை வழங்கி மகிழ்வித்து வரும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். உறவுகளோடும் அதன் உணர்வுகளோடும் விளையாடும் மெகா தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அன்பும் ஆதரவும் உண்டு. அந்த வகையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ் - சீசன் 1 அண்ணன் தம்பிகளின் கதை” என கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் மக்களின் மனம் கவர்ந்த மெகா சீரியலாக வலம் வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சமீபத்தில் நிறைவடைந்தது.

ஸ்டாலின் முத்து, சுஜிதா, ஹேமா, குமரன், வெங்கட், லாவண்யா சரவண விக்ரம் பிஜே தீபிகா ஆகியோர் கதையின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியல் அழகான நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை பேசும் சீரியலாக மக்களின் மனதை வென்றது. ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் காதல், காமெடி, சென்டிமென்ட் என எல்லா தளத்திலும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் காட்சி அமைப்புகளோடு கதாபாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பிலும் ஒரு தரமான சீரியலாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி-யிலும் முன்னணி இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வெற்றிகரமான சீரியலாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் - 1 சீரியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில் உடனடியாக ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலை வழங்கி இருக்கிறது விஜய் டிவி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 "அண்ணன் தம்பிகளின் கதை" என்ற டேக் லைனோடு வந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற டேக் லைனில் தந்தை மகன்களுக்கு இடையிலான பாசப்பிணைப்பை பேசும் கதையாக வருகிறது. எதிலும் ஸ்டாலின் முத்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிரோஷா நடித்திருக்கிறார். மேலும் மகன்களாக விஜே கதிர்வேல், வசந்த் வசீ, ஆகாஷ் பிரேம்குமார், ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் ஷாலினி, சத்யா, விலாஷினி, அஜய் ரத்னம், காயத்ரி பிரியா மற்றும் ஹேமா ராஜ் சதீஷ் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியலை எழுதிய பிரியா தம்பி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் இன் திரைக்கதை வசனங்களையும் எழுதி இருக்கிறார். இயக்குனர் VC.ரவி இயக்கத்தில் உருவாகும் இந்த பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 நேற்று அக்டோபர் 30ஆம் தேதி முதல் தொடங்கியது. புத்தம் புதிய கதை களத்தில் தற்போது ஆரம்பமாகி இருக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலுக்கும் ரசிகர்கள் தங்களது அமோகமான வரவேற்பை கொடுத்து இருக்கின்றனர். சீசன் 1 போல ரசிகர்களை கவரும் அனைத்து சிறப்பம்சங்களும் கொண்டு சீசன் 1ஐ விட சீசன் 2 இன்னும் அதிகமாக மக்கள் மத்தியில் சென்று சேர்ந்து மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.