திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, காதலிக்க யாரும் இல்லை, பேச்சலர் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். 

ஜிவி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று ஆல்பம் வெளியாகி ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தளித்தது. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஹாலிவுட்டில் தயாராகும் ட்ராப் சிட்டி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 

ட்ராப் சிட்டி என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காடும் திரைப்படமாகும், மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரன மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையைச் சொல்கிறது. ரிக்கி பர்ச்சலின் இயக்கும் இப்படத்தை தமிழரான டெல் கே. கனேசன் தயாரிக்கிறார். 

அவர் முன்னதாக டெவில்ஸ் நைட் திரைப்படத்தை KYBA பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். அப்படத்தில் மூத்த தமிழ் நடிகர் நெப்போலியனையும் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் Official Poster வெளியானது. தற்போது இந்த படத்தின் டீஸர் நாளை மாலை வெளியாகவுள்ளது. மேலும் இந்த டீசரை பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிடவுள்ளார்.