எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 25ம் தேதி மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு இரங்கல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரசன்னா, ஜெயராம், பார்த்திபன், இயக்குநர் சீனு ராமசாமி, பாடகி சித்ரா, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அந்த நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில், நான் என் வாழ்க்கையில் எதையும் பெரிதாக மிஸ் பண்ணியது போன்ற ஃபீலிங் எனக்கு அவ்வளவாக இருந்தது இல்லை. நான் முதல் படத்தில் நடிகன் ஆனபோது கட்டிப்பிடித்து கத்தி சொல்ல எங்க அப்பா இல்லையேனு வருத்தப்பட்டிருக்கிறேன். அதன் பிறகு பெரிதாக ஃபீல் பண்ணியது இல்லை. ஆனால் சார் இறந்துட்டார்னு கேள்விப்பட்டபோது, நான் இதுவரைக்கும் அவரை நேரில் பார்த்தது இல்லை. எனக்கு அது ரொம்ப வருத்தமாக இருந்தது என்றார்.

தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்துக்காக மகாலிங்கபுரத்தில் இருக்கும் அவரின் வீட்டில் பூஜைக்கு சென்றிருந்தபோது சாரை பார்க்க முடியுமா, பார்க்க முடியுமானு கேட்டுக் கொண்டே இருந்தேன். பார்க்க முடியாமல் போனது என்னுடைய மிகப்பெரிய துரதிர்ஷ்டசமாக நினைக்கிறேன். எனக்கு அவருடன் நெருக்கமாக பழக்கம் இல்லாததால் என்னால் ஒரு கோர்வையாக பேச முடியாது. 

பஞ்சு அருணாச்சலம் சாரின் பையன் என்னுடன் ராஜஸ்தானில் ஷூட்டிங்கில் இருந்தார். அவர் பேசும் போதும், பாலு அங்கிள், பாலு அங்கிள்னு சொல்லும்போதும், எஸ்.பி.பி. சரண் அவர்களை பார்க்கும்போதும், நான் அவரை ஜிம்மில் பார்த்திருக்கிறேன். வெங்கட் பிரபு சார் பேசும்போதும் சரி, அப்பொழுது எல்லாம் பொறாமையாக இருக்கும். இவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்று பொறாமையாக இருக்கும் என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

இங்கு மேடையில் பேசியவர்களின் குரல் பேரன்பை சொன்னது, ஒரு ஆத்மார்த்தமான நட்பை சொன்னது. அது எப்படி ஒரு மனுஷன் எல்லா இடத்திலயும் அழகாக இருக்க முடியம் என்று தெரியவில்லை. குரலாகவும், ஆளாகவும், குணமாகவும், வீட்டிலும், வெளியிலும், எல்லா இடத்திலும். நாம் ஒரு விஷயத்தை அதிகமாக நேசித்தால் அதுவாகவே நாம் மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்வார்கள். அவர் கலையின் வடிவமாக இருக்கிறார் என்று தான் நான் நம்புகிறேன். 

மேடைகளில் அவருடன் பாடுபவர்கள் குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, இன்னொருத்தருடைய கம்ஃபர்ட் ரொம்ப முக்கியம் என்று பார்க்கிறார். எல்லா இடத்திலும் தான் அன்பின் திரு உருவம், கலையின் வடிவம், ஏதோ அன்பை பரப்புவதற்காகவும், அதை இசையின் மூலமாக பரப்புவதற்காகவும், கடவுளின் நேரடி தூதுவராகத் தான் அவரை நான் பார்க்கிறேன் என விஜய் சேதுபதி கூறினார்.

என்னால் அவரை பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை என்றால் கூட எஸ்.பி.பி. சரணுக்கு எந்த அளவுக்கு நெருக்கம் இருக்கிறதோ, கமல் சாருக்கு எந்த அளவுக்கு நெருக்கம் இருக்கிறதோ, அவருடைய நண்பர்களுக்கு எந்த அளவுக்கு நெருக்கம் இருக்கிறதோ, அதோ போன்று உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எங்களுக்கும் அதே உரிமையும், நெருக்கமும் இருக்கிறது. அதை கொடுத்த அவருக்கு ரொம்ப நன்றி. 

பாலு சார் எங்கள் சொத்து என்று என்றுமே பெருமையாக சொல்லிக் கொள்வோம். சின்ன வயசுல எங்க பாட்டி சொன்னாங்க, நம் குடும்பத்தில் இறந்து போனவர்கள் வந்து வானத்தில் நிலாவாகவும், நட்சத்திரமாகவும், சூரியனாகவும், மழை மேகமாகவும் இருக்கிறார்கள் என்றார். நம்ம பாலு சார், நமக்காக நிலாவாக இருந்து, பாட்டி வடை சுட்ட கதை தான் கேட்டிருக்கிறோம். 

இனி பாலு சார் நமக்காக பாடுவார் என்று நம்புகிறேன் என்றார் விஜய் சேதுபதி. நீண்ட தூர பிரயாணத்தில் எப்பொழுது போனாலும் சரி, நம்முடன் அவர் இருப்பது போன்று ஒரு உணர்வு இருக்கும். எனக்கெல்லாம் சுத்தமாக பாட வராது. ஆனால் நானே பாட முயற்சி செய்வேன். அவர் பாடும் போது நமக்கு ஒரு நம்பிக்கை கொடுப்பார். நம்மையும் சேர்ந்து பாடச் சொல்வார். நாமும் அவருடன் சேர்ந்து பாடுவோம். தான் பார்த்திராத, தெரியவே தெரியாத மனிதர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்ட உன்னதமான மனிதர் என்று இரங்கல் கூட்டத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். 

விஜய்சேதுபதி தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெய்ப்பூரில் டாப்ஸி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தவர், லாபம் படக்குழுவில் இணைந்துள்ளார். விஜய்சேதுபதி நடிப்பில் க.பெ. ரணசிங்கம் திரைப்படம் zeeplex தளத்தில் வெளியாகவுள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் மக்கள் செல்வனின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.