இசையமைப்பாளராக அறிமுகமாகி, இன்று மக்கள் விரும்பும் எதார்த்த நாயகனாக திகழ்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் சிறப்பு என்னவென்றால், அவரது படத்தில் தேவையில்லாத பன்ச் வசனம், பில்ட் அப், மாஸ் காட்சிகள் போன்ற காட்சிகள் இருக்காது. 

விஜய் ஆண்டனி இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் அன்று அவர் படத்தின் அறிவிப்பு வெளியாகி அசத்தி வருகிறது. 

கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தை தேசிய விருது பெற்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். 

பிச்சைக்காரன் படத்தை சசி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் இந்த திரைப்படம் பல சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆன்டனி. 

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று 2016-ம் ஆண்டு அறிவித்தார்கள். அந்த சமயத்தில் பிச்சைக்காரன் படம் பற்றி தான் பலரும் வியந்து பேசினார்கள். காரணம் அந்த படத்தில் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒருவர் இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் போகணும் என்றால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்பார். படத்தில் ஒரு பிச்சைக்காரன் பொருளாதாரம் பற்றி பேச வேண்டும் என்று சசி விரும்பியிருக்கிறார். 

FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தை நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் அக்னி சிறகுகள் என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் காக்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி.

இந்த லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் விஜய் ஆண்டனி பெற்றுள்ளார். இவரது பிறந்தநாளான இன்று இவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. பிச்சைக்காரன் முதல் பாகம் போல இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.