இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை சௌகார் ஜானகி. ஆந்திர மாநிலத்தில் பிறந்தவரான சௌகார் ஜானகி தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே N.T.ராமராவ் அவர்களுடன் ஜோடியாக சௌக்காரு படத்தில் நடித்தார். அதிலிருந்து சௌகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்திய திரையுலகில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1949 ஆம் ஆண்டு திரைத்துறையில் கதாநாயகியாக களமிறங்கிய சௌகார் ஜானகி 1975-ஆம் ஆண்டு வரை கதாநாயகியாகவே பல மொழிகளில் நடித்து வந்தார். இதனை அடுத்து 1975 க்கு பின் துணை நடிகையாக பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், வி.கே.ராமசாமி, ஏவிஎம் ராஜன், ரவிச்சந்திரன், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரோடு இணைந்து நடித்துள்ள சௌகார் ஜானகி N.T.ராமராவ், நாகேஸ்வரராவ், ஜக்கய்யா, டாக்டர்.ராஜ்குமார், பிரேம் நசீர் உள்ளிட்ட பிற மொழி சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர்.

குறிப்பாக தமிழில் எதிர்நீச்சல், ஒளிவிளக்கு, பாமா விஜயம், மாணவன், உயர்ந்த மனிதன், பணம் படைத்தவன், குமுதம், தாய்க்கு தலைமகன், பார் மகளே பார், பாலும் பழமும், நீதி, இருகோடுகள், தில்லு முள்ளு, சினிமா பைத்தியம், புதுப்புது அர்த்தங்கள், வெற்றிவிழா, ஹேராம், தம்பி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன் 4 பேருக்கும், பத்மபூஷன் 17 பேருக்கும், பத்மஸ்ரீ 104 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கலை துறையில் சிறப்பான சேவை புரிந்ததமைக்காக நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.