நீதிமன்றத்தில் சரணடைந்த பிரபல ரவுடி படப்பை குணாவை, 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க” நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட கிட்டதட்ட 24 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, அடி தடியில் ஈடுபட்டதாகவும் குணா மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

இந்த சூழலில் தான், படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக செய்திகள் வெளியானது. 

அத்துடன், தமிழக அரசால் ஸ்பெசலாக நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையிலான போலீசார், படப்பை குணாவை இன்னும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் தான், படப்பை குணாவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராக, “என் கணவரை போலீசார் என்கவுண்டர் செய்ய முயற்சிப்பதாக” குற்றம்சாட்டி, மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

ஆனால், இதனை மறுத்த தமிழக போலீசார். “ரவுடி குணாவை எண்கவுண்ட்டர் செய்யும் திட்டம் இல்லை என்றும், அவர் சரணடைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், போலீஸ் தர்ப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ரவுடி குணா இன்று திடீரென்று சரணடைந்தார். அப்போது, ரவுடி குணாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சரணடைந்த ரவுடியான படப்பை குணாவை, “வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க” 17 வது குற்றவியல் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் இருந்து, பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இதனையடுத்து, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி படப்பை குணாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்மைகளை காவல் துறை சார்பில் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.