சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து சரோஜா, கோவா என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மெகா ஹிட் ஆனது. தொடந்து சினிமா ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான என்டர்ட்டைனிங் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் வெங்கட்பிரபு.

முன்னதாக கடந்த ஆண்டு(2021) இறுதியில் நடிகர் சிலம்பரசன்.T.R. நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆன நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் 10-வது படமாக வெளிவந்த மன்மதலீலை படமும் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் 11-வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக திகழும் நடிகர் நாக சைதன்யா வெங்கட்பிரபுவின் 11வது படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீ்நிவாசா சித்தூரி இந்த (#NC22) புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 11-வது திரைப்படமாக தயாராகும் (#NC22) இப்படம் நாக சைதன்யாவின் 22வது திரைப்படம் ஆகும். மேலும் #NC22 திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.