இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்றும் பல கோடான கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்கிறார். முன்னதாக சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த ஆண்டு(2021) தீபாவளி வெளியீடாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டாக்டர் & பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் #தலைவர்169 புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வலிமைப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரின் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தை தயாரிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போனிகபூர் அவர்கள், “ரஜினிகாந்த் அவர்கள் பல ஆண்டுகளாக எனக்கு நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்பதும் தகவல்களை பகிர்ந்து கொள்வதும் வழக்கம். நாங்கள் இணைந்து பணியாற்றுவதாக முடிவு செய்யப்பட்டால் அதனை நானே முதல் ஆளாக அறிவிப்பேன். வெளியில் பரவும் வதந்திகளை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.