“முகவரி கூட படிக்கத் தெரியாதவர்களுக்கு தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் அப்படி என்ன வேலை இருக்கிறது?” என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அஞ்சல் துறையை மிக கடுமையாக சாடி உள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டு காலமாக தமிழ் மொழி பேசவோ, எழுதவோ தெரியாத வட இந்தியர்களை பணியில் அமர்த்தும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற வருகிறது. 

இது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. அத்துடன், திமுக அரசு புதிதாக பொறுப்பேற்றதும், இதே கருத்தை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கையும் விடுத்தனர். ஆனாலும், இந்த பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

இந்த நிலையில் தான், “தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பணியாற்ற வெளியிடப்பட்டு உள்ள பட்டியலை, திரும்ப பெற மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்கிற குரல்கள் மீண்டும் வலுபெற்று உள்ளன.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் 10.02.2022 அன்று வெளியிடப்பட்டு உள்ளது என்றும், அந்த பட்டியலில் இடம் பெற்றவர்களில் 946 பேரில், 46 பேர்கள் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார். 

அத்துடன், “வட மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலோனோர் அந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர் என்றும், அதில் கல்பித், பவார், சிபு, அனூப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஸ்ரா, பண்டிட், கௌரவ், சிபு, மித்ரா, குப்தா என அந்த பெயர் பட்டியல் வட மாநில பெயர்களை கொண்டவர்களை கொண்டு நிரப்பட்டு நீள்கிறது” என்றும், வேல்முருகன் வேதனை தெரிவித்து உள்ளார்.

மேலும், “தமிழ் நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து விட்டு, வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்கு, தமிழ்நாட்டை சேர்ந்த 46 பேர் மட்டுமே தேர்ந்தெடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது” என்றும், வேல்முருகன் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து உள்ளார்.

அத்துடன், “அரசு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட வட மாநிலத்தவர்களுக்கு, முகவரி கூட படிக்க தெரியாது என்றும், அப்படிப்பட்டவர்கள் எப்படி தமிழ்நாட்டில் மக்கள் சேவை செய்யப்போகிறார்கள் என்று கேட்டால் பதிலிருக்காது” என்றும், தமிழகத்தின் அவலை நிலை குறித்து, அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால், “தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பணியாற்ற வெளியிடப்பட்டுள்ள பட்டியலை திரும்ப பெற மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட அந்த பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வை நடத்தி, தமிழ் மண்ணின் மக்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயப்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசு அலுவலகங்களின் பணியிடங்களுக்கு, தமிழ்நாட்டின் தமிழருக்கே முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறைக்கான பணியிடங்களுக்கான தேர்வை, மாநில அளவிலேயே நடத்தவும், இட ஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்” என்றும், வேல்முருகன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.