இந்திய திரை உலகின் மிகப்பெரிய ஆளுமையாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வெள்ளித்திரையில் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக, கலை ஞானியாக, இன்றும் பல கலைஞர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். தொடர்ந்து சின்னத்திரையிலும் தொகுப்பாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரை வாயிலாகவும் மக்களை மகிழ்வித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், சம்பத், ஷிவானி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் ULTIMATE நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தற்போது தற்காலிகமாக விலகுவதாக திடீரென உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பல முன்னணி நட்சத்திர நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றி வரும் நிலையில் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாகவும் மற்றும் கமல்ஹாசனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும் இடையிடையே படப்பிடிப்பு தடைபட்டது. 

இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதால் மற்ற நட்சத்திர நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தன்னால் காத்திருக்கக் கூடாது என முடிவு செய்துள்ள உலகநாயகன் கமல்ஹாசன் தற்காலிகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவரையும் சந்திப்பதாகவும் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ...