தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர்களின் ஒருவரான லலிதானந்த் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் இடம்பெற்ற “அது ஒரு காலம் அழகிய காலம்” மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். அடுத்து நடிகர் ஜீவாவின் ரௌத்திரம் படத்தில் இவர் எழுதிய “அடியே உன் கண்கள் ரெண்டும்” பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தது.

தொடர்ந்து ரௌத்திரம் படத்திற்கு பிறகு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் லலிதானந்த் எழுதிய  “உன் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே” என்ற  பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி சூப்பர் ஹிட் அடித்தது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம், நடிகர் கார்த்தியின் காஷ்மோரா, விஜய்சேதுபதியின் ஜூங்கா, இயக்குனர் சேரனின் திருமணம், நடிகர் அருண்பாண்டியனின் அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதிய பாடலாசிரியர் லலிதானந்த் அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடிக்கும் கொரோனா குமார் திரைப்படத்தின் பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களைத் தவிர லெமூரியாவில் இருந்து காதலின் வீடு & ஒரு எலுமிச்சையின் வரலாறு என இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் லலிதானந்த் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாடலாசிரியர் லலிதானந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(பிப்ரவரி 20) மதியம் காலமானார் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

பாடலாசிரியர் லலிதானந்த் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழ் திரையுலகமும் ரசிகர்களும் லலிதானந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.