கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனட் திரைப்படத்தில் அசிஸ்டெண்ட் கேமரா ஆப்ரேட்டராக பணியாற்றியுள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த டெனட் படத்தில் நீரவ் ஷா பணியாற்றியிருப்பது பெருமை பட வைத்துள்ளது. டெனட் படத்தின் டைட்டில் கிரெடிட்ஸின் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். 

தனது மூன்றாம் கண் கேமரா கொண்டு ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தளிக்கும் உயரிய கலைஞன் நீரவ் ஷா. கடந்த 2004-ம் ஆண்டு பைசா வசூல் என்ற இந்தி திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக கால் பதித்தார். தமிழில் விஷால் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம். போக்கிரி, கிரீடம், பில்லா, சர்வம், வானம் என இவர் தொட்டதெல்லாம் ஹிட் தான். இவர் கைவசம் அயலான், துப்பறிவாளன் 2, தலைவி போன்ற படங்கள் உள்ளது. 

வலிமை குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகாதா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, நீரவ் ஷா பற்றிய தகவல் கிடைத்துள்ளது. மொமெண்டோ, இன்ஸ்செப்சன், இன்டஸ்டெல்லர் என அறிவியல் படங்களை அசாத்தியமாக கையாளும் கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்துவருகின்றனர். அப்படிப்பட்ட இயக்குனரின் படத்தில் சிறிய பங்கு பெற்றவர், தல நடிக்கும் வலிமை படத்தில் அஜித்தை எப்படி காண்பிப்பார் என்ற ஆவலில் உள்ளார் ரசிகர்கள். 

வினோத் இயக்கும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹுமா குரேஷி நாயகியாகவும், அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது. படக்குழு தரப்பில் இருந்து வலிமை படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

சமீபத்தில் அஜித்தின் பைக் வீலிங் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் வலிமை படத்தின் ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளை வெளிநாட்டில் புதிய தொழில்நுட்பம் மற்றும் சண்டைக் கலைஞர்களை பயன்படுத்தி படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.