தனது உடல் மொழியாலும் நகைச்சுசுவையான வசனங்களாலும் பல கோடி தமிழ் மக்களின் மனதில் வைகை புயலாக மையம் கொண்டிருக்கிறார் வடிவேலு. இன்றும் சமூக வலை தளங்களில் வலம் வரும் மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் கடவுளாக விளங்கும் வடிவேலு, கடைசியாக இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

வைகைப்புயல் வடிவேலுவை மீண்டும் திரையில் காண பலகோடி தமிழ் ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். முன்னதாக இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகமாக தயாராக இருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி சமயத்தில் சில காரணங்களால் வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

நீண்ட கால இடைவெளிக்கு பின் சமீபத்தில் வடிவேலுவின் மீது இருந்த தடை நீக்கப்பட்டது. தொடர்ந்து வடிவேலு புதிய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்புகளும் வெளியானது.முன்னதாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில்  சுந்தர்.C நடித்த தலைநகரம் படத்தில் ரசகர்களின் ஃபேவரட்டான வடிவேலுவின்  நாய் சேகர் கதாபாத்திரத்தை பெயராக கொண்ட நாய் சேகர் திரைப்படம் தயாராக உள்ளதாக சுராஜ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று  லைகா புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வைகை புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வடிவேலுவின் மாஸ்ஸான நாய் சேகர் ரிட்டன்ஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ...